இலக்குகளை எட்டிப்பிடிக்க 4 D X ரூல்ஸ்!

இலக்குகளை எட்டிப்பிடிக்க 4 D X ரூல்ஸ்!

புத்தகத்தின் பெயர்: The 4 Disciplines of Execution

ஆசிரியர்கள்: Jim Huling, Sean Covey, Chris Mcchesney

பதிப்பாளர்: Simon & Schuster

நன்கு செயல்படும் பல நிறுவனங்கள்  எதிர்காலத்தில் வெற்றிப் பெறமுடியாமல் போகக்  காரணம், எதிர்காலத் திட்டங்களைச் செயல்படுத்தாததே. ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும்போது எதிர்காலத் திட்டங்களுக்குத் தேவையான உளமார்ந்த ஈடுபாட்டை ஊழியர்களிடமிருந்து பெறுவது கடினம். ஏனென்றால், அன்றாட விஷயங்களைச் சரியாகவும், திறம்படவும் நடத்தி முடிக்கவுமே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும். இதற்கானத் தீர்வை கண்டுபிடிப்பதே இன்றைய நிறுவனத் தலைமையின் முன்னிருக்கும் சவால்.



இந்த விஷயத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வது தான் ‘தி ஃபோர் டிசிப்ளின்ஸ் ஆஃப் எக்ஸிக்யூஷன் (சுருக்கமாக, 4டிஎக்ஸ்)’ எனும் இந்தப் புத்தகம்.

இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு இந்தப் புத்தகம் சொல்லும் நான்குவித செயல்முறை ஒழுங்காற்றல்கள் (4 டிஎக்ஸ் - டிசிப்ளின்ஸ்) முழுமையான தீர்வு அளிக் கும் என்கிறார்கள் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள். முழுக்கவனத்தையும் அதிமுக்கிய விஷயங்களில் வைப்பதன் மூலமும், முதன்மை திட்டங்களைக் கண்டறிந்து அவற்றைச் செயலாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும், என்ன எதிர்பார்த் தோம், என்ன நடந்தது என்பதைச் சுலபத்தில் கண்டுகொள்ள ஏதுவான ஸ்கோர்போர்டுகளை நிறுவி, அதனைத் தொடர்ந்து கவனித்துவருவதன் மூலமும், எதிர்காலம் குறித்த திட்டத்தின் முக்கியத் துவம் மற்றும் அது செயலாக்கப்படுவதின் அவசியம் குறித்த பொறுப்பை நிறுவனத் தின் அனைவரும் உணரும் வகையில் இழைந்தோட செய்வதன் மூலமும் மட்டுமே நிறுவனத்தின் நிர்வாகிகள் பிரமாண்டமான வெற்றியைப் பெற முடியும் என்கிறார்கள் ஆசிரியர்கள். நிறுவனமோ, தனி நபரோ இந்த நான்கு வழிவகைகளைத் தங்கள் செயல்பாட்டில் நடைமுறைக்குக் கொண்டுவந்தால், அன்றாட சுனாமிக்கு நடுவேயும் எதிர்காலத்துக்கான வியூகங்களைச் செயல்படுத்த முடியும்  என்று உறுதி சொல்கின்றனர் ஆசிரியர்கள்.



செயல்முறை ஒழுங்கு - 1: உங்கள்  வியூகத்தின் அதிமுக்கிய விஷயத்தின் இலக்குகளின் மீது [வைல்ட்லி இம்பார்ட்டன்ட் கோல்ஸ் (WIG)] அதீத கவனம் செலுத்துங்கள்!

எதிர்காலத்துக்கான பல திட்டங்களிலும் கவனம் வைக்காமல், அவற்றில் எது மிக மிக முக்கியமோ, எது நம்மை நம்முடைய வியூகத்தையும்; இலக்கையும் [விக்] நிறைவேற்ற மிக உதவுமோ, அதில் மட்டுமே நம் முழுக் கவனத்தையும் வைக்க வேண்டும். அந்த மிக மிக முக்கியமான செயலை கண்டறிவதற்கு நான்கு விதிகளை ஆசிரியர்கள் சொல்கின்றனர்.

செயல்முறை ஒழுங்கு - 2: தொய்வு வருவதற்கு முன்னரே சரிசெய்தல்!

எதிர்காலத் திட்டங்கள் குறித்த செயல்பாட்டில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா இல்லையா என்று சொல்லும் விஷயங்கள், செயல்பாடுகள் முடிந்த பின்னால் அடைந்த வெற்றிக்குப் பின்னால் தெரியும் மற்றும் வெற்றியினால் விளையும் விஷயங்களேயாகும். நாம் இப்படிப்பட்ட விஷயத்துக்காக பாடுபடுகி றோம். வருமுன் தெரிந்துகொண்டு செயல்படுவதுதானே அழகு! வருமுன் அறிந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் நாம் சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடைய முடியும்.

செயல்முறை ஒழுங்கு - 3: ஸ்கோர் போர்டு ஒன்றை நிறுவுங்கள்!

ஒருநாள் கிரிக்கெட்டில் பரபரப்பாக ரன் குவிக்கும் மனநிலையில் விளையாட்டு வீரர்கள் விளையாடுகிற மாதிரியான  ஈடுபாடு நிறுவனத்திலும் வரவேண்டும் என்றால், எல்லோருக்கும் தெரியும் வகை யில் ஸ்கோர் போர்டு என்பது கட்டாயம் வைக்கப்பட வேண்டும். ஸ்கோர் போர்டு மட்டுமே அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எங்கே இருக்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தும். ஸ்கோர் போர்டே போட்டி மனப்பான்மையைக் கொண்டு வந்து, உளமார்ந்த ஈடுபாட்டுக்கு வழிவகைச் செய்யும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

செயல்முறை ஒழுங்கு - 4: ஒவ்வொரு வருக்கும் ஒரு பொறுப்பை ஒப்படைப்பது (அக்கவுன்டபிலிட்டி)!

மேலே சொன்ன மூன்று டிசிப்ளின் களும் ஓர் ஆடுகளத்தை அமைக்க உதவுவதே ஆகும். நான்காவதாக ஆசிரியர்கள் சொல்வது, ஒவ்வொரு வருக்கும் ஒரு பொறுப்பை ஒப்படைப் பது. ஒவ்வொரு குழுவும் வாரம் ஒருமுறை 20 - 30 நிமிட நேரம் சந்தித்து [விக் மீட்டிங்] எதிர்காலம் குறித்த வியூகங்களில் அதிமுக்கிய கவனம் செலுத்தி, செயல்பாட்டில் இருக்கும் நிறை, குறைகளை ஆராய வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

இந்தக் குழுவின் கூட்டத்தில் ஒவ்வொருவரும் கொடுக்கும் வாக்குறுதி கள் தனிமனிதன் என்ற அந்தஸ்தில் வழங்கப்படுபவையாகவே திகழ்கின்றன. இதனால் வேலை கனஜோராக நடக்க வாய்ப்புள்ளது என்றும், சிலர் தொடர்ந்து சொல்வதை நிறைவேற்றும் போது ஓர் ஆரோக்கியமான போட்டி உருவாகி நாளடைவில் அனைவருமே சொல்வதைச் செய்ய முயல்வார்கள் என்கின்றனர் ஆசிரியர்கள்.

இந்த 4 டிஎக்ஸ் முறையில் அதிகாரத் தின் மூலம் எதிர்காலத்துக்கான வேலைகள் முடிக்கப்படுவதில்லை. அனைவரின் இயல்பான மற்றும் ஆர்வத்துடனான ஈடுபாட்டுடன் இந்த வகை வேலைகள் நிறைவேற்றப்படு கின்றன என்கின்றனர் ஆசிரியர்கள்.

பாகம் - 2

இனி இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகத்துக்கு வருவோம். 4 டிஎக்ஸைக் கொண்டு ஒரு நிறுவனத்தில் அறிமுகம் செய்யும்போது எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம்? இந்த 4டிஎக்ஸை ஒரு நிறுவனத்தில் எப்படி நடைமுறைப் படுத்துவது? ஏற்கெனவே சொன்னதைப் போல் 4டிஎக்ஸ் என்பது ஒரு சட்டத்திட்டம் இல்லை. ஒரு செயல்முறை ஒழுங்காகும். இதனாலேயே இதனை நடைமுறைப்படுத்துவதற்குக் குழுவாரியாக மிகவும் நேர்த்தியான முயற்சி தேவைப்படுகிறது. ஒவ்வொரு குழுவும் கீழே சொல்லியுள்ள ஐந்துபடி நிலைகளைக் கடந்து சென்றே 4டிஎக்ஸை நடைமுறைப்படுத்துகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.



படிநிலை1: முக்கிய இலக்கை நிர்ணயித்தல் (விக்): நம் குழுவுடைய அதிமுக்கிய கவனம் தேவைப்படும் இலக்கு மற்றும் விஷயம் [விக்] என்பது எது என்பதில் தெளிவு பெறுவது. எதில் கவனம் வைத்தால் பெரிய அளவில் மாற்றங்கள் வரும் / பலன்கள் கிடைக்கும் என்பதைக் கண்டறிவதுதான் மிக மிக முக்கியமான முதல்படி நிலையாகும்.

படிநிலை 2: ஆரம்பித்தல்: 4டிஎக்ஸை அறிமுகம் செய்து ஆரம்பித்து வைக்கும் போது ஒவ்வொரு குழுவின் தலைவரும் நிறையவே பிரயத்தனப்பட வேண்டி இருக்கும். குழுவுக்குத் தேவையானது என்ன என்பதனை பரிபூரணமாக உணர்ந்து செயல்படவேண்டியிருக்கும்.

படிநிலை 3: ஏற்றுக்கொண்டு செயல் படுதல்: சுலபத்தில் குறைந்த காலத்தில் 4டிஎக்ஸை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திவிட முடியாது. நாள்பட முயற்சித்தால் மட்டுமே இதனை ஏற்றுக்கொள்வது என்பது சாத்தியம். எடுத்த எடுப்பிலேயே 4டிஎக்ஸ் எதிர்பார்த்த பலன்களைத் தருகிறதா என்று பார்க்காமல், 4டிஎக்ஸ் என்ற நடைமுறை குழுவில் செவ்வனே ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்றே பார்க்க வேண்டும். குழுவில் இருக்கும் எதிர்ப்பாளர்களும் நம்பும் வகையிலான பலன் குறித்த விளக்கங்களைச் சொல்லி, 4டிஎக்ஸ் நடைமுறைப்படுத்துதல் என்ற புதிய பாதையை நிறுவவேண்டியிருக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

படிநிலை 4: மேம்படுத்துதல்: 4டிஎக்ஸை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தும் வேளையில் வியூகங்களை நோக்கி முன்னேற உதவும் வகையில் குழுவினர் தரும் புது யோசனைகள் அனைத்தையும் ஊக்குவிக்க வேண்டும். 4டிஎக்ஸை செயல்படுத்தும் குழுவினர் செய்யும் தொடர் முயற்சியையும், குழுவினர் பெற்ற வெற்றியையும் அவ்வப்போது கொண்டாடவும் மறக்கக்கூடாது.

படிநிலை 5: பழக்கமாக மாற்றுதல்: ஒரு குழுவுக்கு 4டிஎக்ஸ் என்பது நடைமுறையில் பழக்கமாக மாற வேண்டுமென்றால், ஓர் அதிமுக்கிய கவனம் தேவைப்படும் விஷயம் (விக்) நடத்திமுடிக்கப்பட்ட பின்னர் உடனடி யாக அடுத்த ‘விக்’ கண்டறிந்து அதனை நோக்கி செயல்படுத்தும் நடைமுறை களை (ஸ்கோர்போர்டு போன்றவற்றை) உடனுக்குடன் குழுவினர் மத்தியில் கொண்டுவந்துவிட வேண்டும். 4டிஎக்ஸ்ஸில் முக்கியமானது நிர்ண யிக்கபடும் இலக்குகள் அடையக்கூடிய வையாக இருக்க வேண்டும் என்பதுதான். நிறையக் குழுக்களின் தலைவர்கள் அடைய முடியாத இலக்குகளை நன்றாகத் தெரிந்தே நிர்ணயித்து விட்டு, இதில் 75% நடந்தாலே போதுமானது என்று செயல்பட ஆரம்பிப்பார்கள். இது மிகத் தவறான ஒன்று. 4டிஎக்ஸைப் பொறுத்தவரை, அதை அறிமுகப்படுத்தி நிறுவுவதில் காட்டப்படும் கருத்தும் திறமையுமே வெற்றிக்கு வழிவகுக்கும். அதற்கான வழிமுறைகளையும் இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளனர் ஆசிரியர்கள்.

பாகம் - 3

4 டிஎக்ஸை நிறுவுவதில் கடைப்பிடிக்க வேண்டியவை:

4டிஎக்ஸை நிறுவ முயலும்போது நிறுவனத்தின் செயல்பாட்டுக் கலாச்சாரத்தை மனதில்கொள்ள  வேண்டும். ஒரு நிறுவனத்தில் முற்றிலு மாக 4டிஎக்ஸ் அறிமுகப்படுத்தப் படும்போது இது ஒருநாள் ஈவென்ட் அல்ல. ஒரு தொடர் பிராசஸ் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோல், 4டிஎக்ஸ் என்பது ஒரு சிறந்த டீம் வொர்க்காக மட்டுமே பார்க்கப்படவும்; நிறுவப்படவும் வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு தலைவரைக் கொண்டே நிர்மாணிக்கப் பட வேண்டும்.

இந்த 4டிஎக்ஸ்ஸை வெற்றிகரமாக நிறுவ சிறந்த ஆறு வழிகளையும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். ஒரு நிறுவனத்தைப் போட்டிகளுக்கிடையே வெற்றிகரமாகச் செயல்படுத்த நினைப்பவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது!