அள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் : அள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!


எஸ்.ஐ.பி - முன்பு ஒரு சிலருக்கே தெரிந்த வார்த்தையாக இருந்தது, இன்றைக்கு பலரும் அடிக்கடி கேள்விப்படுகிற வார்த்தையாக மாறி இருக்கிறது. ஏழையைக்கூட பணக்காரராக மாற்றிவிடும் மந்திர சக்தி கொண்டது எஸ்.ஐ.பி. சிறு துளி, பெரு வெள்ளம் என்பதற்கு இனி எஸ்.ஐ.பி.யை உதாரணமாக சொல்லலாம். இந்த எஸ்.ஐ.பி.யை  பற்றி எல்லோருக்கும் எடுத்துச் சொல்லத்தான் இந்தக் கட்டுரை.

நம்மில் பெரும்பாலோர் மாதாந்திர சம்பளம் பெறுபவர்கள் அல்லது சொந்தத் தொழில் செய்பவர்கள். நம்மால் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை நமது எதிர்காலத் தேவைகளுக்காக ஒதுக்கி சேமிக்க/ முதலீடு செய்ய முடியும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் அவ்வாறு மாதம்தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ச்சியாக செய்யும் முதலீட்டைத்தான் எஸ்.ஐ.பி (SIP – Systematic Investment Plan) என்கிறோம்.

இந்த முறை கடந்த பல ஆண்டுகளாக நம்மிடையே இருந்தாலும், கடந்த நிதி ஆண்டில் நமது மக்களிடம் மிகவும் பாப்புலராகி உள்ளது. செபி/ ஆம்ஃபி/ கேம்ஸ் அமைப்புகள் தரும் புள்ளி விபரங்களின்படி, கிட்டத்தட்ட ஒரு கோடி எஸ்.ஐ.பி இன்று உள்ளன.   கடந்த காலத்தில்  மாதமொன்றுக்கு சுமார் ரூ.2,000 கோடி என்கிற அளவில் எஸ்.ஐ.பி மூலமாக வந்த முதலீடு தற்போது மாதத்துக்கு ரூ.3,500 கோடியை எட்டியுள்ளது. இந்த உயர்வு கடந்த வருடத்தில் பங்குச் சந்தை பெரிய வருமானம் எதுவும் தராத சமயத்தில் நடந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

எத்தனை ஃபோலியோக்கள் (கணக்குகள்) உள்ளன/ புதிதாக திறக்கப்பட்டுள்ளன என்பதும் மியூச்சுவல் ஃபண்டுகளின் வளர்ச்சியைக் காண்பிக்கும் ஒரு அளவுகோலாகும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் பங்கு சார்ந்த திட்டங்களில் கிட்டத்தட்ட 1,58,000 புதிய ஃபோலியோக்கள் தொடங்கப்பட்டுள்ளன.  அதே போல், கடன் சார்ந்த திட்டங்களில் கிட்டத்தட்ட 2,25,000 புதிய ஃபோலியோக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்தில் நம் நாட்டில்  மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் மொத்த ஃபோலியோக்களின் எண்ணிக்கை சுமார் 4.80 கோடிக்கு மேல்.

உள்நாட்டு வரத்து அதிகரித்து வருவது, நமது பொருளாதாரத்துக்கு ஒரு பெரிய பலமாகும். மேலும், நமது பங்குச் சந்தையில் உள்ள ஏற்ற இறக்கத்தை இது வெகுவாகக் குறைக்கும் – ஏனென்றால் இந்த வரத்து சிறு முதலீட்டாளர் களிடமிருந்து நீண்ட கால முதலீட்டுக்காக வருகிறது.எஸ்.ஐ.பி முறையிலான முதலீட்டில் பல சாதகங்கள் உள்ளன. வாங்கும் விலையை சராசரி செய்வது, சிறு சிறு தொகையாக சேமித்து முதலீட்டைப் பெருக்குவது, முதலீட்டு ஒழுக்கத்தை கொண்டு வருவது, சென்டிமென்ட்டுகளைத் தவிர்ப்பது, முதலீட்டுக்குப்பின்  செலவு என்ற பழக்கத்தைக் கொண்டு வருவது, நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானம் என பல சாதகங்கள் உள்ளன. எனவேதான் எஸ்.ஐ.பி முதலீடு பல தரப்பட்ட மக்களிடமும் பாப்புலராகி வருகிறது.

மியூச்சுவல் ஃபண்டுகளில், எஸ்.ஐ.பி முறையில் அனைத்து வகை சொத்துக்களிலும் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு,  பங்கு சார்ந்த திட்டங்கள், கடன் சார்ந்த திட்டங்கள், தங்கம், வெளிநாட்டு ஃபண்டுகள் போன்ற பல வகையான சொத்துக்களிலும் எஸ்.ஐ.பி முதலீட்டு முறை உண்டு.

உங்களின் நீண்ட காலத் தேவைகளுக்கு பங்கு சார்ந்த திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். குறுகிய காலத் திட்டங்களுக்கு கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, உங்களின் தேவைகளான பண்டிகை காலச் செலவுகள், எமர்ஜென்ஸி ஃபண்டுகள், பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்கள், இன்ஷுரன்ஸ் கட்டணங்கள் போன்றவற்றுக்காக லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வரலாம். எப்போது பணம்  தேவைப்படுகிறதோ, அப்போது பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். இப்படி திரும்ப எடுப்பதற்கு எந்தவிதமான அபராதமும் கிடையாது.

இப்படி முதலீடு செய்து வைக்கும் பணத்துக்கு வங்கி சேமிப்புக் கணக்கைவிட அதிகமான வட்டி கிடைக்கும். பணம் தேவையென்று சொன்ன அடுத்த நாள் காலையில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்!


ரிலையன்ஸ் போன்ற சில ஃபண்ட் நிறுவனங்கள் விசா டெபிட் கார்டைக்கூட இந்த விதமான திட்டங்களுடன் வழங்குகின்றன. ஐசிஐசிஐ போன்ற இன்னும் சில நிறுவனங்கள் இதுபோன்ற திட்டங்களுடன் இணைத்து மெடிக்கல் எமர்ஜென்ஸி செலவு வசதிகளையும் வழங்குகின்றன.

எஸ்.ஐ.பி-யில் பல விதமான கால இடைவெளிகளில் நம்  முதலீட்டை செய்துகொள்ளலாம். உதாரணமாக, தினசரி, வாராந்திரம், மாதாந்திரம், காலாண்டுக்கு/ அரையாண்டுக்கு / ஓராண்டுக்கு ஒருமுறை என பல இடைவெளிகளில் இன்று முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம்.

மேலும், சில ஃபண்ட் நிறுவனங்கள், எஸ்.ஐ.பி-க்கு மாதத்தில் எந்த தேதியை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளன.

எஸ்.ஐ.பி முறை மூலம் முதலீடு செய்வதற்கு உச்சபட்ச தொகை ஏதும் கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். ஓரிரு நிறுவனங்களில் குறைந்தபட்ச தொகை ரூ 100-ஆக உள்ளது. பல நிறுவனங்களில் குறைந்த பட்சமாக ரூ 500 அல்லது ரூ 1,000 உள்ளது. இன்றைய நிலையில் இந்தத் தொகையில் எந்த இந்தியப் பிரஜையாலும் முதலீடு செய்ய முடியும் என்பதே உண்மை.

அதேபோல், எஸ்.ஐ.பி-யில் குறைந்தபட்ச முதலீடு 6 தவணைகளாக இருக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது கேன்சல் செய்யும்வரை தொடர்வதற்கு எழுதிக் கொடுக்கலாம்.

தொழில் செய்யும் பலரும், எங்களால் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய முடியாது. எங்களுக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று தெரியாது என்று பல காரணங்களைக் கூறி முதலீடு செய்வதைத் தவிர்த்து வருகிறார்கள். இன்றைய தினத்தில் ஒரு எஸ்.ஐ.பி  மூலம்   முதலீடாகும் தொகை சராசரியாக ரூ.3,000-ஆக உள்ளது. ஒவ்வொரு மாதமும் ரூ.3,000-யை முதலீடு செய்ய முடியாவிட்டாலும் ரூ.2000-த்தையாவது தொழில் செய்பவர்கள் முதலீடு செய்யலாமே!

எஸ்.ஐ.பி எவ்வளவு நாட்களுக்குப் போடலாம் என்ற சந்தேகம் பலரின் மனதிலும் எழும். எஸ்.ஐ.பி ஆரம்பிக்கும் போது, முடிவு தேதி உங்களின் இலக்குகள் வரையிலான தேதியாக இருக்கட்டும். அல்லது பங்கு சார்ந்த திட்டங்களாக இருக்கும்போது இலக்குகளுக்கு ஓரிரண்டு ஆண்டுகள் முன்னதாக இருக்கட்டும். இல்லையென்றால் முடிவு தேதியை 2099 அல்லது கேன்சல் செய்யும் வரை என்று போட்டுவிட்டால் பிரச்னையே இல்லை.எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது எண்டோவ் மென்ட்/ யூலிப் பாலிசிகளைப் போல கவலை கொள்ள வேண்டாம். ஒரு மாத நோட்டீஸில் எஸ்.ஐ.பி-யை எப்போது வேண்டுமானாலும் கேன்சல் செய்துகொள்ளலாம். சிலர் 12 மாதத்துக்கு எஸ்.ஐ.பி காலத்தை வைத்துக் கொள்கிறேன்; பிறகு ஃபண்ட் எவ்வாறு செயல் படுகிறதென்று பார்த்து விட்டு புதுப்பித்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார்கள். நீங்கள் பிஸியாக இருப்பவர் என்றால் அவ்வாறு செய்யாதீர்கள்! பல சமயங்களில்  தொடர்ச்சி விட்டுவிடும்.

எஸ்.ஐ.பி தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்போது,  இடையில் ஓரிரு மாதங்கள் என்னால் செலுத்த முடியவில்லை என்றால் ஏதும் பிரச்னை ஆகிவிடுமா என்ற கேள்வியும் உங்கள் மனதில் எழும். அவ்வாறு ஓரிரு மாதங்கள் செலுத்த முடியாமல் தவறும்போது,  மியூச்சுவல் ஃபண்டிலிருந்து உங்களுக்கு ஏதும் அபராதம் விதிக்கப்படாது. உங்கள் வங்கி தான், உங்கள் கணக்கில் பணம் இல்லாமலிருந்து இ.சி.எஸ் (ECS) மறுக்கப்பட்டதற்காக (reject) அபராதம் விதிக்கும்.

ஒரு மாதம் பணம் கட்டத் தவறினாலும், மியூச்சுவல் ஃபண்டுகள் அடுத்த மாதத்திலிருந்து உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஆட்டோ மெட்டிக்காக பணம் எடுத்து விடும். நீங்கள் கட்டத் தவறிய தொகையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் திரும்ப எடுக்காது.  வேண்டுமானால்,  நீங்கள் ஒரு செக் கொடுத்து அல்லது ஆன்லைன் மூலமாக கட்டாமல் தவறவிட்ட தொகையை மீண்டும் கட்டலாம்.

ஐசிஐசிஐ போன்ற சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எஸ்.ஐ.பி பாஸ் (pause) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன - எஸ்.ஐ.பி முதலீட்டில் ஒரு முறை 1 – 3 மாதங்களுக்கு பாஸ் வசதியை உபயோகித்துக் கொள்ளலாம்.

சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், தொடர்ச்சியாக மூன்று முறை எஸ்.ஐ.பி தொகை உங்கள் வங்கிக் கணக்கில் இல்லாமல் போகும்பட்சத்தில், எஸ்.ஐ.பி-யை கேன்சல் செய்து விடுகின்றன.

எஸ்.ஐ.பி முறையில், உங்களது தேவைக்கு ஏற்றாற்போல முதலீடு செய்வதற்காக சில நல்ல திட்டங்களை பரிந்துரை செய்து உள்ளோம். எஸ்.ஐ.பி என்கிற உன்னதமான முதலீட்டு உபகரணத்தை பயன்படுத்தி   அனைவரும் வளம் பெறுவோம்!