டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஏஜென்ட்டுகளுக்கு கூடுதல் கமிஷன் சரியா?

எல்லோருக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஏஜென்ட்டுகளுக்கு கூடுதல் கமிஷன் சரியா?



டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த விழிப்பு உணர்வு பொதுமக்களிடம் மிகவும் குறைவாக உள்ளது. டேர்ம் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, பாலிசிதாரர் இறந்தபின்புதான்  க்ளெய்ம் கிடைக்கும். இதைப் பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் பாலிசிதாரர் இறந்தபிறகு க்ளெய்ம் தொகை எந்த வகையில் உதவியாக இருக்கும் என்பதை பலரும் உணருவதில்லை.

நகர்ப்புறங்களிலேயே நிலைமை இப்படி இருக்க, புறநகர்களின் நிலைமையை சொல்ல வேண்டியதே இல்லை. மேலும், இந்தியாவில் ஆயுள் காப்பீடு ஊடுருவல் 2014-ல் 2.6 சதவிகிதமாக குறைந்துள்ளது. (2013-ல் 3.1 சதவிகிதமாக இருந்தது. பிற நாடுகளுடன் ஓப்பிடுகையில் இது மிகவும் குறைவு).

இந்த நிலையில் காப்பீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் விற்பனையை ஊக்குவிக்கவும், பாலிசிகளை விநியோகம் செய்யும் ஏஜென்ட்டுகளின் கமிஷனை உயர்த்தப் போவதாக இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான ஐ.ஆர்.டி.ஏ தெரிவித்துள்ளது. வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியானது எல்லோருக்கும் சென்று சேரவேண்டும். அதனால் ஏற்படும் பலனை எல்லா மக்களும் அடைய வேண்டும் என்று ஐ.ஆர்.டி.ஏ. நினைப்பது சரியான விஷயம்தான். ஆனால், இதற்காக ஏஜென்ட்டுகளின் கமிஷனை அதிகரிப்பது சரியா, இப்படி கூடுதலாக தரப்படும் கமிஷன் தொகை பிரீமியம் செலுத்தும் பாலிசிதாரரிடமிருந்து வசூலிக்கப்படுமா என்கிற கேள்விகளை பார்தி ஆக்ஸா நிறுவனத்தின் தலைமை துணைத் தலைவர் சி.எல். பரத்வாஜிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

இன்ஷூரன்ஸ் பிரீமியம் நிர்ணயம்!

‘‘இன்ஷூரன்ஸ் பாலிசியின் பிரீமியமானது பல வகையில் அளவிடப்படுகிறது. அதாவது, பாலிசிதாரரின் ரிஸ்க், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் செலவுகள், இறப்பு விகிதம், பாலிசியை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பிரீமியம் நிர்ணயிக்கப்படும். இதில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் செலவு என்பது முன்கூட்டியே திட்டமிடப்படும். அதாவது, ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர நிரந்தர செலவுகள், வேறு செலவுகள் போன்றவை கணக்கிட்டு அந்த தொகை அனைத்து பாலிசிகளிலும் பகிரப்படும். அதேபோல, இன்ஷூரன்ஸ் நிறுவனம் விநியோகிக்கும் பாலிசிகளில் இழப்பீடு தந்தது போக மீதம் உள்ளதே, அந்த நிறுவனத்தின் லாபமாக இருக்கும்.

அடுத்து, பாலிசி எடுப்பவர்களின் ரிஸ்க் கணக்கிடப்படும். அதாவது, பாலிசி எடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதிக ரிஸ்க் உடையவர்கள் எனில், க்ளெய்ம் அதிகமாக வரும். அதுவே 30 அல்லது அதற்குக் கீழ் உள்ள வயதினர் எனில் க்ளெய்ம் குறைவாக வரும் என கணிக்கப்படும். இந்த ரிஸ்க்கை பொருத்தும் பிரீமியம் மாறுபடும்.



ஏஜென்ட் கமிஷன்!

ஒரு பாலிசியை வடிவமைக்கும்போதே ஏஜென்ட் கமிஷனும் எவ்வளவு என்பது முடிவு செய்யப்படும். இந்த ஏஜென்ட் கமிஷன் நிறுவனத்தின் செலவில் வந்துவிடும். அதாவது, பாலிசியை வடிவமைத்து அதற்கான அனுமதி பெற்று அதன்பிறகு வாடிக்கையாளரிடம் கொண்டு செல்லும் வரை ஆகும் செலவு, பாலிசி விற்பனைக்குப் பிறகு ஆகும் செலவு என அத்தனை செலவுகளையும் ஒவ்வொரு பாலிசிக்கும் தனித்தனியாக கணக்கிடப்படும். இதனுடன் ஏஜென்ட் கமிஷனுக்கும் சேர்த்து ஐ.ஆர்.டி.ஏ.விடம் அனுமதி வாங்கப்படும். இந்த  அனுமதி பெற்றபிறகு பிரீமியம், ஏஜென்ட் கமிஷன் என எதையும் அதிகரிக்க முடியாது.

ஏஜென்ட் கமிஷன் தொகையைப் பொறுத்தும் பிரீமியம் மாறுபடும். ஏஜென்ட்டாக இருப்பவர் பாலிசிதாரர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்குவதற்காகத்தான் இந்த கமிஷன் தொகை வழங்கப்படுகிறது.

ஏஜென்ட்டுகள் ஊக்கமடைவார்கள்!

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்வது மிகவும் கடினமாக இருக்கும். எனவே, அந்த பாலிசிகளுக்கான கமிஷன் தொகை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பங்களுக்கு டேர்ம் பாலிசி மிகவும் முக்கியமானது. ஏனெனில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சிறிய கிராமங்களில் எவ்வளவுதான் விழிப்பு உணர்வுக் கூட்டம் நடத்தினாலும் குறுகிய காலத்தில் அதை செய்ய முடியாது. ஏஜென்ட் கமிஷன் தொகையை அதிகரிக்கும்போது அதிக பாலிசிகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்பும் அதிகம் இருக்கும்.  கமிஷன் அதிகமாகக் கிடைக்கும்போது இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் அந்த பாலிசி விற்பனை செய்வதில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள்.

தவிர, ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் நாட்டின் எல்லா பகுதிகளிலும் விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என ஐஆர்டிஏ குறிப்பிட்டுள்ளது. அதை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தற்போதுதான் நடைமுறைப்படுத்தத் துவங்கி உள்ளன. வளர்ந்த நகரங்களில் சமூக வலைதளங்கள், இணையதளம் மூலமாக இந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இனிவரும் ஆண்டுகளில் கிராமங்களில் விழிப்பு உணர்வுக் கூட்டங்கள் நடத்துவதற்கான வேலைகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இன்னும் அதிவேகமாக மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் இனிமேல் இரண்டாம் தர நகரங்களில்தான் இன்ஷூரன்ஸ் பிசினஸுக்கான வாய்ப்பு அதிகம்’’ என்று முடித்தார் அவர்.

ஐ.ஆர்.டி.ஏ.வின் இந்த நடவடிக்கையினால் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இன்னும் அதிகமான மக்களுக்கு சென்று சேரும் என நாம் எதிர்பார்த்தாலும், இதனால் தவறான வாக்குறுதிகளைத் தந்து பாலிசிகளை விற்கும் (Misselling) விபரீதமும் நடக்க வாய்ப்புண்டு. இதனை ஐ.ஆர்.டி.ஏ. எப்படி தடுக்கப் போகிறது என்பதற்கான வழிகாட்டுதல்களையும் இப்போதே தந்துவிட்டால் நல்லது!