ஹோம் லோன் அட்வான்ஸ்... எந்தக் கடன் பெஸ்ட்?

ஹோம் லோன் அட்வான்ஸ்... எந்தக் கடன் பெஸ்ட்?



வீடு வாங்க, கனவு காணும் பலரும் அதற்கான திட்டமிடல்களைச் செய்வதே இல்லை. பலரும் முழுத் தொகைக்கும் கடன் வாங்கி வீடு வாங்கிவிடலாம் என நினைக்கிறார்கள். வாங்கும் வீட்டின் மதிப்பில் 80 சதவிகித தொகைதான் கடனாகக் கிடைக்கும். மீதமுள்ள 20 சதவிகித தொகையை வீடு வாங்குபவர்கள்தான் முன்பணமாகச் செலுத்த வேண்டும்.

ஆனால், சிலர் வீடு வாங்குவதற்குச் செலுத்த வேண்டிய முன்பணத்தையும் கடன் வாங்கியே செலுத்து கிறார்கள். இப்படி செய்யும்போது வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படுகிறது.



என்னென்ன சிக்கல்?

வீட்டுக் கடன் வாங்கும்போது ஏற்கெனவே நீங்கள் வாங்கியிருக்கும் கடன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும். அதாவது, உங்கள் வருமானம் என்ன, ஏற்கெனவே எவ்வளவு கடன் உள்ளது, அதற்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதையும் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் கவனிக்கும். இதனால் வீட்டுக் கடன் தொகை குறையவும் வாய்ப்புள்ளது.

மாதம் ரூ.50 ஆயிரம் மாத சம்பளம் வாங்குபவர் ரூ.25 லட்சம் வீட்டுக் கடன் வாங்க முடியும். ஏற்கெனவே ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார் என்றால் ரூ.20 லட்சம்தான் கடன் கிடைக்கும்.

மேலும், வீடு என்பது எல்லோருக்கும் அவசியம் தேவையான ஒன்று. அதற்கான முழுத் தொகையையும் கடனாக வாங்கி வீடு வாங்கக் கூடாது. வீடு வாங்க வேண்டும் எனில் 2, 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே அதற்காகத் திட்டமிடுவது அவசியம். அதாவது, ரூ.30 லட்சத்தில் வீடு வாங்க திட்டமிட்டால், நீங்கள் ரூ.6 லட்சத்தை முன்பணத்துக்காகச் சேமிக்க வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் வீட்டின் விலை உயர வாய்ப்புள்ளதால், நீங்கள் முன்பணமாக ரூ.10 லட்சத்தை சேமிப்பது நல்லது.

முன்பணமாகச் செலுத்த வேண்டிய தொகையைச் சேமிப்பிலிருந்து எடுத்து செலுத்துவதே நல்லது. அதாவது, ஃபிக்ஸட் டெபாசிட், சிட் ஃபண்ட் (கடைசி சீட்டு மூலமாகக் கிடைக்கும் தொகை யாக இருந்தால் மட்டும்), வேறு வகையான முதலீடுகள் மூலமாகச் செலுத்துவது புத்திசாலித்தனமாக இருக்கும். முன்பணமாகச் செலுத்த வேண்டிய தொகையைக் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை எனில் வாடகை வீட்டில் இருப்பதே சிறந்தது.



மேலும், 100 சதவிகித தொகையையும் கடனாக வாங்கினால், எதிர்காலத்தில் வேறு சூழ்நிலைகளுக்காகக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கடன் வாங்க முடியாது. ஏற்கெனவே அதிகக் கடன் இருக்கும்போது புதிதாகக் கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். மேலும், அதிக இஎம்ஐ செலுத்தும்போது பிற அத்தியவாசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல் உருவாகும்.

தவிர, வீட்டுக் கடன் மூலமாக வீடு வாங்கும் பலரும், ‘எப்படியும் வாடகை தருகிறோம். அதனுடன் சில ஆயிரங்களைச் சேர்த்து இஎம்ஐ கட்டலாம்’ என நினைப்பார்கள். இது முற்றிலும் தவறு. ஏனெனில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் வாடகை தரமுடியவில்லை எனில், அந்தத் தொகையைச் சேர்த்துக் கொடுக்கலாம்.

ஆனால், வீட்டுக் கடனில் இஎம்ஐ தேதியில் கட்டாயம் பணத்தைச் செலுத்த வேண்டும். இல்லையெனில் அதற்கு அபாரதம் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

இருப்பினும் ஒருவருக்கு எல்லாவிதத்திலும் ஏற்புடைய ஒரு வீடு வாங்கும் வாய்ப்பு கிடைத்து 100 சதவிகித கடன் வாங்கினாலும், திரும்பக் கட்டுவதற்கான வருமானமும் இருந்தால், முன்பணத்துக்கான கடன் வாய்ப்புகள் பற்றி இனி பார்ப்போம்.

கடன் வாய்ப்புகள்!

கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன், தங்க நகை அடமான கடன், ஷேர் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் அடமான கடன், வீட்டு அடமானக் கடன், பிஎஃப் கடன் போன்ற பல கடன்கள் உள்ளன. வீட்டுக் கடனுக்கான முன்பணத்தை கடனாக வாங்கும்போது, இந்தக் கடன்களில் எதைத் தேர்வு செய்வது என்பது முக்கியமான விஷயம்.

காரணம், இந்தக் கடனை வாங்குவதற்குமுன் அதற்கான வட்டி விகிதம் என்ன, எத்தனை ஆண்டுகளில் கடனை திரும்பச் செலுத்த வேண்டும் என்பதை யெல்லாம் கவனிப்பது அவசியம். மேலும், இந்தக் கடன்களில் உள்ள சிக்கல்கள் என்ன, அவற்றை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்துக் கூறுகிறார் நிதி ஆலோசகர் வி.சங்கர்.

தனிநபர் கடன்!

“முன்பணம் செலுத்துவதற்குப் பெரும்பாலானவர்கள் தனிநபர் கடன் அல்லது நகை அடமானக் கடனையே தேர்வு செய்கிறார்கள். இதில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகமாக இருக்கும். அதாவது, கடன் வாங்கும்போது 12% வட்டி என்று கூறுவார்கள். இது ஃபிளாட் வட்டி விகிதம். ஆனால், உண்மை யில் 13-26% வரை வட்டி இருக்கும். எனவே, முடிந்தவரை தனிநபர் கடனைத் தவிர்ப்பது நல்லது.

உதாரணமாக, வீட்டுக் கடனுக்கான முன்பணத்தைச் செலுத்துவதற்காக ரூ.5 லட்சத்தை 12.5 சதவிகித வட்டியில் தனிநபர் கடன் மூலமாக, மூன்று ஆண்டு களில் திரும்பச் செலுத்தும் வகையில் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் திரும்பச் செலுத்தும் தொகை யானது (அசல்+ வட்டி)      ரூ.7,15,677-ஆக இருக்கும். இதில் வட்டி மட்டும் ரூ.2,15,677 ஆகும். எனவே, முடிந்தவரை இந்தக் கடனைத் தவிர்ப்பது நல்லது.

நகை அடமானக் கடன்!

நகை அடமானக் கடனுக்கான வட்டி விகிதம் 12-14 சதவிகிதமாக இருக்கும். அதுவும் பொதுத்துறை வங்கிகளில் மட்டும்தான் இந்த வட்டி விகிதம் இருக்கும். தனியார் வங்கிகள், அடகு கடைகளில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். மேலும், கடனுக்கான கால அளவு ஓராண்டுதான். அதற்குள் கடனை திரும்பச் செலுத்த வேண்டும். இது மாதாந்திர பட்ஜெட்டில் அதிக சுமையை ஏற்படுத்தும்.



கிரெடிட் கார்டு கடன்!

கிரெடிட் கார்டில் கடன் வாங்கிச் சொத்து வாங்குவது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விஷயமாகும். ஏனெனில் இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் வருடத்துக்கு 36-45% இருக்கும்.

அடமானக் கடன்!

மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள், நிறுவனப் பங்குகள், சொத்து ஆகியவற்றை அடமானமாக வைக்கும் கடனுக்கு 14-15% வரை வட்டி இருக்கும். மேலும், மியூச்சுவல் ஃபண்ட், பங்கு இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம்  வட்டியைவிட மிக அதிகமாக இருந்தால், இந்த அடமானக் கடன் வாங்கலாம். வட்டி விகிதத்தைவிடக் குறைவான வருமானம்தான் கிடைக்கும் என்றால் இந்தக் கடனைத் தவிர்ப்பது சிறப்பு.

பிஎஃப் கடன்!

மாத சம்பளம் வாங்குபவர்கள் பிஎஃப் கடன் வாங்க முடியும். பிஎஃப் கணக்கு துவங்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வீடு வாங்குவதற்காகக் கடன் வாங்க முடியும். ஆனால், ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பு இது ஒன்றுதான் என்பதை மறக்கக் கூடாது. எனவே, கூடுமானவரை பிஎஃப் கடன் வாங்காமல் இருப்பது நல்லது.

வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே இந்தக் கடனை வாங்கலாம். ஆனால், பிஎஃப் கடனை திரும்பச் செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் கடனை வாங்கியபிறகு விருப்ப பிஎஃப் (விபிஎஃப்) மூலமாகக் கடன் வாங்கிய தொகைக்குக் குறிப்பிட்ட சதவிகிதத்தை வட்டி போட்டு மாதாமாதம் திரும்பச் செலுத்துவது முக்கியம். இதைச் செய்ய முடியும் எனில், பிஎஃப் கடன் வாங்கலாம். நிதி ஒழுக்கம் இல்லாதவர்கள் இதைத் தவிர்த்துவிடலாம்.

மேலும், பிஎஃப் மூலமாகக் கடன் வாங்கிய தொகையை விருப்ப பிஎஃப் மூலமாகத் திரும்பச் செலுத்தும்போது 9.75% வட்டி போட்டுச் செலுத்துவது நல்லது.

உதாரணமாக, பிஎஃப் மூலம் ஒருவர் ரூ.5 லட்சம் கடன் வாங்கினால், அடுத்த 3 வருடத்தில் அவர் விபிஎஃப் மூலம் ரூ.6,69,095 செலுத்தினால் சரியாக இருக்கும். மேற்கூறிய எந்தக் கடனுக்கும் வருமான வரி விலக்கு பெற முடியாது” என்று முடித்தார் சங்கர்.

வீடு அவசியம் தேவையானதுதான். அதற்காக அதிக வட்டிக்கு கடன் வாங்கி வீடு வாங்க வேண்டும் என நினைக்கக்கூடாது. எனவே, முன்கூட்டியே திட்டமிட்டு சேமித்து, பொறுமையாக வீடு வாங்குவது சிறப்பு.