புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும்?

புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும்?


இந்தக் காலத்து இளைஞர்கள் படித்து முடித்ததுமே ஓரளவுக்கு நல்ல வருமானம் தரும் வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். கல்லூரியில் படிக்கும் வரை வீட்டிலிருந்து பணம் வாங்கிச் செலவு செய்தவர்களுக்கு, சம்பாதிக்கத் தொடங்கியபின் சேமிப்பு என்பது சற்று புரியாத, கடினமான விஷயமாகவே இருக்கும். இதனால் விடுமுறை நாட்களில் மால்களில் உலாத்துவது, ஹோட்டல்களில் விலை உயர்ந்த உணவு சாப்பிடுவது, அடிக்கடி  செல்போன் மாற்றுவது என பலவற்றுக்கும் அதிக செலவு செய்து, பணத்தை இஷ்டத்துக்கு கரைத்துக் கொண்டிருப்பார்கள்.

வாங்கும் சம்பளத்திலிருந்து ஒருவரால் எவ்வளவு சேமிக்க முடியும், அதை எப்படிச் சேமிக்கலாம் என்பது போன்ற திட்டங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதே இன்றைய இளைஞர்கள் சேமிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம். புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் தங்களது வருமானத்துக்கு ஏற்றவாறு சேமிக்க எப்படித் திட்டமிட வேண்டும் என்பது குறித்து வெல்த் டிரைட்ஸின் நிதி ஆலோசகர் அபுபக்கரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘இன்றைய இளைஞர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும் என்று தெரியாமல் அதனைச் செய்யாமலே விட்டுவிடுகின்றனர். இந்த விஷயத் தில் அவர்கள் சில தவறுகளைச் செய்கிறார்கள். என்னென்ன தவறுகள்!

வருமானத்தைவிட அதிகம் செலவு செய்வது, உடனடியாக ஆசைப்பட்டதை வாங்கத் தூண்டும் இம்பல்ஸ் நிலையைச் சமாளிக்க முடியாமல் இருப்பது, மாத செலவு களுக்குத் திட்டமிடத் தெரியாமல் இருப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது என எந்தவிதமான எதிர்காலத் திட்டமும் இன்றி இருக்கிறார்கள் இந்தக் காலத்து இளைஞர்களில் பலர்.

தவிர, பார்ட்டிகள், எலெக்ட்ரானிக்  பொருட்கள் மீதான மோகம், ரிஸ்க் தெரியாமல் மோசமான முதலீடுகளில் பங்கெடுப்பது, சமுதாய அந்தஸ்துக்காக கிரெடிட் கார்டு வாங்கித் தேய்ப்பது, கார் மற்றும் வீட்டுக் கடன் வாங்கி கட்ட முடியாமல் தவிப்பது போன்ற தவறுகளைப் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவுடனே செய்து மாட்டிக்கொள்கிறார்கள்.

இன்னும் சிலர், சம்பளம் அதிகரித்தவுடன் சேமித்துக் கொள்ளலாம் என்று நினைத்து கடைசி வரை அதைச் செய்யாமலே விட்டுவிடுகிறார்கள். இன்னும் சிலர் சேமிக்க வேண்டும் என்று நினைத்தாலும், சரியான வழிநடத்துதல் இல்லாமல் ஏதேதோ முதலீடுகளில் பணத்தைப் போட்டு வாழ்க்கையை வீணாக்கிக் கொள்கின்றனர்.

 எப்படித் திட்டமிடுவது?

இன்றைய இளைஞர்கள் சேமிக்கத் திட்டமிடும் போது இரண்டு விஷயத்தைக் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, அவர்களது வருமானம்; மற்றொன்று அவர்களுக்குக் கட்டாயமாக உள்ள செலவுகள். வருமானம் என்பது இன்றைய காலகட்டத்தில் சராசரியாக 15,000 ரூபாய் என்ற அளவில் துவங்கி, 40,000 ரூபாய் வரை உள்ளது. இதில் அவர்களுக்கு கட்டாயம் உள்ள செலவுகள் என்னென்ன என்பதைக் கவனிக்க வேண்டும்.

இன்றைய சூழலில் சொந்த ஊரில் வேலை பார்ப்பவர்களைவிட வெளியூருக்குப் போய் வேலைபார்க்கிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். வெளியூருக்குச் சென்று வேலை பார்க்கும்போது அங்குத் தங்குவ தற்கான கட்டணம், போக்குவரத்து மற்றும் உணவுக்கான கட்டணம் என்பது கட்டாயமாகிறது. தவிர, கல்விக் கடனுக்கான மாத தவணை என்பதும் கட்டாயமாகிறது. இவை தவிர்த்து, காப்பீட்டு பாலிசி ஏதும் எடுத்திருந்தால், அதற்கான பிரிமீயத்தைக் கட்டவும் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்தச் செலவுகள் எல்லாம் போக, சரியாகச் செலவழித்தால், சில ஆயிரம் ரூபாயாவது கையில் நிச்சயம் மிஞ்சும். இதை எப்படிச் சேமிக்கலாம்?

முதலில், 15,000 ரூபாய் சம்பாதிப்பவருக்குக் கட்டாயத் தேவைகள் போக, 5,000 ரூபாயாவது மிச்சம் இருக்கும். இதனைக் குடும்பத் தேவைக்கு அனுப்புவது அவசியம். அப்படியொரு கட்டாயம் இல்லாதவராக இருந்தால், அந்த 5,000 ரூபாயை சேமிப்புக்குப் பயன்படுத்தலாம்.
25,000 ரூபாய்ச் சம்பாதிப்பவர் மற்ற செலவுகளும், குடும்பத்துக்கு அனுப்பிய பணம் போகவும், 5,000 ரூபாயை சேமிப்புக்காக எடுத்துவைக்கலாம். அதேபோல், 40,000 ரூபாய் வரை சம்பாதிப்பவர், எல்லா செலவுகளும் போக, குறைந்தது 10,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.ஒருவர் மாதம் சராசரியாக 5,000 ரூபாய் சேமிக்க முடியும் எனில், அவரால் இன்னும் 35 வருடங்களில் எவ்வளவு சேமிக்க முடியும்? இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

மூன்று பேர் புதிதாக வேலைக்குச் சேருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் மூன்று பேருக்கும் ஒரேமாதிரியான சம்பளம்தான். ஆனால், மூன்று பேரும் வேறுவிதமான சேமிப்பு முறையைப் பின்பற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

முதல் நபர் 21 வயதிலிருந்து 30 வயது வரை 10 வருடம் மாதம் 5,000 ரூபாய் சேமிக்கிறார். அதன்பின் அவருக்குத் திருமணமாகி, குழந்தைகள் பிறந்தவுடன் அவர் சேமிப்பை நிறுத்திவிடுகிறார். 12% வருமானம் தரக்கூடிய முதலீட்டில் முதலீடு செய்திருந்தால், அவர் ஓய்வு பெறும்போது அவருக்குக் கிடைக்கும் தொகை 2.67 கோடி ரூபாயாக இருக்கும்.

இரண்டாமவர், முதல் பத்து வருடங்கள் எதுவும் சேமிக்காமல், 11-வது வருடத்திலிருந்து மாதம் 10,000 ரூபாயை சேமிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படிச் செய்தால், அவர் ஓய்வு பெறும்போது அவரிடம் 2.43 கோடி ரூபாய் இருக்கும்.

மூன்றாமவர், 21 வயதிலிருந்து ஓய்வு பெறும் வரை தனது செலவுகள் மற்ற முதலீடுகள் எல்லா வற்றையும் தாண்டி, மாதம் 5,000 ரூபாயை 12% வருமானம் தரக்கூடிய முதலீட்டில் சேமிக்கிறார் எனில், ஓய்வு பெறும்போது அவரிடம் 3.89 கோடி ரூபாய் இருக்கும்.இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மாதம் 10,000 ரூபாய் சேமித்தவருக்கு அதிக வருமானம் கிடைக்காமல், மாதம் 5,000 சேமித்த வருக்குக் கிடைப்பதுதான். ஏனென்றால், 10,000 ரூபாய்ச் சேமிப்பவர் நீண்ட காலத்துக்குச் சேமிக்காததுதான் காரணம்.

இன்றைய இளைஞர்கள் தங்களது சேமிப்பை முதலீடு செய்யும்போது, கடன் மற்றும் ஈக்விட்டி பண்டுகளில் 30:70 அல்லது 40:60 என்ற விகிதத்தில் முதலீடு செய்யலாம். இதன்மூலம் சுமார் 12% வருமானம் கிடைக்கக்கூடும். ஈக்விட்டி பண்டுகளில் டைவர்ஸிஃபைடு ஃபண்ட் மற்றும் லார்ஜ், மிட் கேப் பண்டுகளில் சிறந்த பண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்தால், 12 சதவிகித வருமானத்தைப் பெற முடியும்’’ என்றார் அபுபக்கர்.

இன்றைய இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சேமிக்கத் துவங்குவதால், அதுவே ஒரு நல்ல பழக்கமாகிவிடும். இதனால் அநாவசியமாகச் செலவழிக்கும் பழக்கம் ஒழியும். கார் போன்ற ஆடம்பரங்களை நாடாமல் இருப்போம். இதனால் பின்நாட்களில் முதலீடு செய்வதற்குப் போதிய பணம் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு.

இன்றைக்கு கையில் இருக்கும் பணத்தைத் திட்டமிட்டு செலவழித்தால்தான், எதிர்காலத்தில் கடன்காரன் என்கிற பட்டத்தைச் சுமக்காமல், எல்லா தேவைகளையும் நிறைவு செய்துகொள்கிற மாதிரியான நிலையை அடைய முடியும். இதற்கு முதல் தேவை திட்டமிட்டுச் செலவழிப்பதும், சேமிப்பதும்தான்!